Aug 30, 2009

வழித்துணை



என்
வாழ்வின் உயர்விற்குக்
காரணியாய் நீயிருந்தாய் .
வாழ்வின் பயணத்திற்கும்
வழித்துணையாய் நீ வருவாய்

எனத் திளைத்திருந்த
மணித்துளியில்...
என்ன நிகழ்ந்ததோ ,
நஞ்சு என அறிந்தே
கஞ்சி போல் குடித்து
என்னை ஏங்க விட்டுத்
தூங்கி விட்டாய்
நிரந்தரமாய்....

மண் உண்டுப் போயிருக்கும்
என்னை மறைத்து வைத்த
உன் இதயத்தை.
என்னச்சொல்லி நான் தேற்ற
உன்னைச் சுமக்கும்
என் இதயத்தை ...?

ஆன்மா உன்னைத்
தேடும்போதெல்லாம்
துறவியாய் - உன்
துயிலறை வருகிறேன்.

உன்
மடிமீது அமரும் நினைவில்
நீ படுத்துறங்கும்
மண்மேடு மீதமர்ந்து
மாண்டு மீள்கிறேன் ...

உனைத் தனியாய்த்
தூங்கவிட்டு
திரும்பி
நான் வருகையில்
எனக்குத் துணையாய்
உன் துயர நினைவுகள்...
......... ...........!

இன்று ...நான்
இன்பமாய் வாழ்வதாய்
எல்லோரும் எண்ணுகிறார்கள்
என்றாலும்,

நான்
நடமாடும் கல்லறை
கண்ணே!

Aug 28, 2009

புரியாத புதிர்



கடவுள்
மனித உருவில்
எப்போதாவது ஒருமுறை
காட்சியளிப்பார்
எனச் சொல்லக்
கேட்டிருக்கிறேன்.

எனக்கு மட்டும்
வாரந்தவறாமல்
வெள்ளி தோறும்
காட்சியளிப்பது

ஏனென்றும் புரியவில்லை
எப்படியென்றும் தெரியவில்லை ...!?

Aug 26, 2009

ஏன் ?



உன்னை நினைத்து
நான் அணைத்து
உறங்கும் தலையணை

என்னைப் பிரிந்து
தனித்திருக்க மறுத்து
உன்னைப்போன்றே
அடம்பிடிக்கிறதே
ஏன்?


Aug 24, 2009

மை


' முடிவென்பது
வேறொன்றின் தொடக்கமே '
என்பது நிஜம் தான் போல!

நம்மூர்
கோயில் திருவிழா நிறைவடைந்தது.
நம்மிடையே
காதல் திருவிழா ஆரம்பமானது.

திருவிழா முடிந்து
உறவுகளெல்லாம்
ஊருக்குப் புறப்படும்
பரபரப்புக் காலையில்...

என் அறைக்கு ஓடிவந்து
கண்ணாடிக்கு முன் நின்று
கண்ணுக்கு மையிட்டு
நுனிவிரலால் தொட்டெடுத்து
திருஷ்டியாய் கண்ணாடிக்கும்
வைத்துவிட்டுச் சென்றுவிட்டாய் .


அன்றிலிருந்துதான்.....

அடிக்கடி
கண்ணாடி பார்க்கத் தோனுது.
பார்த்தாலும்
உன் முகத்தை மட்டும் தான் காட்டுது.
பார்த்தபடியே
கண்டதையும் பேசத் தூண்டுது.
பேசினாலும்

பதிலுக்கு கண்ணைச் சிமிட்டுவதும்
உதட்டைச் சுழிப்பதுமாய்
கண்ணாடிக்குள் இருந்தபடியே ...நீ !

உண்'மை' யைச் சொல்லேன்.
அன்று நீ
' மை '
வைத்து போனது
கண்ணாடிக்கா...?
என் கண்ணுக்கா...?


பி. கு:-

ஆக்கம்- சத்ரியன்.
ஊக்கம் - ஹேமா .

Aug 21, 2009

உதிரும் மேகம்




மோதி
உடைந்து
ஒளிர்ந்து
கிளர்ந்து
மேகம்
உதிரத் தொடங்கியதும்,
வருடத்துவங்கி விடுகிறது

உன்
நினைவுகள் ...!



Aug 20, 2009

மழை




பெரும் மழை என்றில்லை
தொடர்த்தூறல் என்றாலும்
உன்னை நினைவூட்டாமல்
பொழிந்து விட்டுப்போக
இன்னும்,
பழகிக் கொள்ளவில்லை
மழை ...!

Aug 17, 2009

மீள்பார்வை




உலகம் சுழலும்
இத்தனை பரபரப்பிலும்
உனக்காக ஒதுக்கி
நான் தனித்திருக்கும்
தருணங்கள்

பின்னோக்கி
நிதானித்துச் சுழலும்
நினைவின் நொடிகளைத்
துரிதப்படுத்த
விரும்பவில்லை
மனம் ...!


Aug 15, 2009

கனவு



Aug 14, 2009

இந்தியச் சுதந்திரம்




வெள்ளைக்காரனிடம்
வாங்கி
வெள்ளைக்காரியிடம்
கொடுத்துவிட்டோம் !


இந்தக் கவிதை எனதருமை நண்பர் திரு.சா.வீரையா அவர்களால் எழுதப்பட்டது.
அவருக்கு என் மனமார்ந்த நன்றி.


அந்த கவிதை வரிகளை நண்பர் ஒருவர் சொல்ல, செவிக்குள் நுழையும் முன்பே
கன்னத்தில் செருப்பால்
அடித்துவிட்டு உள் நுழைந்தது.

நன்றி: கவிதை சொன்ன நண்பருக்கும், படம் தந்தருளிய கூகிளுக்கும்.


Aug 12, 2009

நீயே சொல்-01




இனி ...
வருடாவருடம்
'கல்யாண நாள்' வரும்.
நீயும் கொண்டாடுவாய்
அவனுடன்.


இனியும்
வருடாவருடம்
'காதலர் தினமும்' வருமே!
நான் யாருடன்...?



Aug 10, 2009

குழந்தைக் காதலி



உண்ணக் கொடுத்த
கஞ்சிக் கிண்ணத்தை
கவிழ்த்துக் கொட்டி

கண் காது மூக்கு
கை கால் வாயெனப் பூசி
விரல்களைச் சப்பி
விளையாடும்
குழந்தையைப் போல்

காதல் நிரம்பிய - என்
நெஞ்சக் கிண்ணத்தைக்
கவிழ்த்துக் கொட்டி
விளையாடுகிறாய்
நீ!

கேட்டால் ...
காதலில் இன்னும்
குழந்தை நான் என
குதித்தாடுகிறாய்...!


Aug 7, 2009

பயணங்கள் ...



பன்னெடுங்காலமாக
பயணித்தபடியே
மனித வாழ்வு.
நம்மின்
ஒவ்வொரு பயணமும்
வெவ்வேறு கதைச் சொல்லும்.

அன்றும் அப்படித்தான்...

பேருந்துப் பயணத்தில்
மாமிசப்பையுடன் நான்.
பக்கத்து இருக்கையில்
மரக்கறிப்பையுடன் அவர்.

சில நொடிகளுக்குப் பின் ...
"மாமிசப் பிரியரா நீங்கள் ?" ,என்றார்
என் மௌனம் தொடரவே
"உயிர் பலி பாவம்", என்றார்.

"உண்மைதான்.
மணமுடித்து விட்டீர்களா ? ",என்றேன்.

"ஆமாம்".

நயமாகக் கேட்டேன்
"நள்ளிரவுக்குப் பின்
நர மாமிசம்
உண்பவன் தானே நீ?"

"அது ",
இயற்கை என்றார்.

"இதுவும் தான்",
என்றபடி எனக்கான
நிறுத்தத்தில்
இறங்கி நடந்தேன்.

பயணத்தைத் தொடர்ந்தது
பேருந்து.

Aug 6, 2009

ஆதலால் என் கணவா...


என்
உயிர் ணவனே,

நம் ஊர் பற்றி
உணராதவரா நீர்?
கல்லடி கூட தாங்கிக் கொள்வேன்.
ஊரார் சொல்லடியை...?

மழலையொன்று
இல்லையென்று
மலடி என்றென்னை ...!?

எழுத்துக்கள் அழியுமென்று
அழுகையை நிறுத்திவிட்டு...

இனியும்,
தொலைவில் இருந்தே
தொலைப்பேசி வழி என்னை
போற்றுவதை விட்டுத் தொலை!

ஊருக்கு விரைந்து வந்து...
உன் நெற்றிக்கண்ணை
என் நெற்றிப் பொட்டில் பதித்திடு .
போர்வைக்குள் வேர்வை நீரில்
என்னை வேக வை.

உன் உதிரச் சூட்டால்
என் உடலை அதிரச் செய்.
நம் உயிர்ச் செல்லால்
என் கருப்பையை
கனக்கச் செய் .

பத்தாம் மாதம் ...
மூச்சடக்கி மூச்சுத்திணறி
முகம் சுளிக்கும்படி
அசிங்கச் சொற்களால் உன்னை
அர்ச்சனை செய்தபடி
கருப்பையின்
உள்திரையோடு
உரித்து
உன்
கையில் தருவேன்.

தொப்புள் கொடியை நீயே அறு
தாய்மையின் புனிதம் நீயாய் உணர்.

இப்போது அங்கே ...
என்னை
நினை.
உன்னை அறி.

வருவாய் விரைவாய்
உன் வெளிநாட்டு
வருவாய் மறந்து.

நம்
எதிர்க்காலம்

வரவாய் வரட்டும்
என்னுள்ளிருந்து...!

ஆதலால்,
என் கணவா...வா!

Aug 5, 2009

தலைகுனிவு



சுதந்திரம் அடைந்து
அறுபத்து முன்றாண்டைக்
கடந்தும்

வறுமை கூட
பெருமைதான்
இந்தியனுக்கு.

விருதுகள்
எவனும்
தருவதென்றால்...!


Aug 4, 2009

என்ன இது?



உன் பெயரையும்
என் பெயரையும்
ஒன்றாக்கி எழுதியிருந்தேன்
நாட்குறிப்பில்.


விருந்துக்கு வந்த - என்
அத்தைமகள்
விபத்தாய் அதைப்
பார்த்துவிட்டு
பற்றவைத்து விட்டாள் - அவள்
அத்தையிடம். (என் அம்மா)

முதலில் அக்கா,
பின் அம்மா, அண்ணா
ஏன் தம்பியுங்கூட !

என்னைச் சுற்றி
அரண் போல் நின்று
அரம் போல் அறுத்தார்கள்

"என்ன இது ?" ,எனக் கேட்டு.

'என்ன அது' , என்று
உண்மையாகவா தெரிந்திருக்காது...?




Aug 3, 2009

அமுத கனி




காதல் தோல்வி

கசப்பானதொரு
அனுபவம் தான்.

ஆனாலும்

சுகமானது.

உண்ணும்போது
சிறிதாய்க் கசந்தாலும்,
எண்ணும்போது
இனிக்கும்
நெல்லிக்கனி போல...!